தமிழில் நீட் தேர்வுஎழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள்கூடுதலாக வழங்குவதற்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் இருந்ததால், தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க, சிபிஎஸ்இ-க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மற்றும் ஏற்கனவே முதல் பட்டியலில் மருத்துவ இடம் ஒதுக்கப்பட்ட 20 மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நீட் தேர்வு வினாத்தாளில் தவறுகள் இருந்தால் மாணவர்கள் அருகியுள்ள ஆங்கில கேள்விகளை பார்த்து தகுந்த விடையளிக்க வேண்டுமென்று ஏற்கனவே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் சிபிஎஸ்இ தரப்பில் வாதிடப்பட்டது.
"தமிழில் தேர்வெழுதிய 23,000 மாணவர்களும் மொழிபெயர்ப்பில் தவறு இல்லையென்றால், அந்த குறிப்பிட்ட எல்லா கேள்விகளுக்கும் சரியான விடையளித்து இருப்பார்களா என்பது நிச்சயமற்றதாக இருக்கும்போது, ஒவ்வொரு தவறான கேள்விக்கும் தலா நான்கு மதிப்பெண்கள் என 196 மதிப்பெண்கள் வழங்க கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவுக்கு தடைவிதிக்கிறோம்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், இதற்கென சிறப்பு குழுவை அமைத்து மொழிபெயர்ப்பை சரியாக மேற்கொள்ள சிபிஎஸ்இ நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நடந்தது என்ன?
கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில் 49 கேள்விகளில் மொழிமாற்ற பிழைகள் இருந்ததால் அதற்குரிய 196 மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை வழங்குவதோடு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மருத்துவம் படிக்கவுள்ள மாணவர்களின் புதிய தரவரிசை பட்டியலை சிபிஎஸ்இ வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே, சிபிஎஸ்இ நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டு, மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வை நடத்த பட்டியலை வழங்கிவிட்டது. அதன் அடிப்படையில் 3,500 நபர்களுக்கு மருத்துவ சீட் அளிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment