சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் திங்கள்கிழமை செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், “சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை உட்பட பல திட்டங்கள் குறித்து அறியாமல் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நல்ல திட்டங்களை அறிந்துகொண்டு, மக்களுக்கான திட்டங்கள் என்பதை புரிந்துகொண்டு வழிவிட வேண்டும் என எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன்.
விவசாயிகள் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் அக்கறையைவிட மத்திய அரசுக்கு அதிக அக்கறை இருக்கிறது. விவசாயிகள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்கள் என்கிற உறுதிப்பாட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து சொல்லி வருகிறார்.
இந்தியாவிலேயே 10,000 கோடி மதிப்பீட்டில் 8 வழிச்சாலையை பெறும் இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆக, தமிழகத்திற்கு கிடைக்கும் நல்லனவற்றையெல்லாம் இந்த மாநிலத்துக்கு கிடைக்கும் தீங்கானவை போல எதிர்க்கட்சிகள் முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றன. இதைப்போல திட்டங்கள் நமக்கு மிகப்பெரிய பாக்கியம்.
ஐந்து பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்திற்காக மலைகளை குடையப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், அதையெல்லாம் நிதின் கட்கரி மறுத்துவிட்டார். குறிப்பிட்ட தூரத்திற்குத் தான் மலைகள் வருகின்றன. அதுபோலவே, வீடுகளும் காடுகளும் அழிக்கப்படவில்லை. நல்ல வழிகளை ஆதரிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது ரஜினியின் கருத்து மட்டுமல்ல, பிரதமர் மோடியின் கருத்தும் அதுதான். பிரதமர் மோடிக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை என்பது போன்ற தோற்றம் கிடையாது. விவசாய நிலங்கள் குறைவான அளவில் கையகப்படுத்தப்பட்டு, அந்த விவசாயிகளுக்கு அதிக அளவில் இழப்பீடு கொடுக்கப்படுகிறது.
இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு இன்னும் தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டும். இத்திட்டத்தால் வாகனங்கள் வேகமாக மட்டும்தான் செல்ல முடியும் என தமிழருவி மணியன் சாதாரணமாகச் சொல்கிறார். வாகனங்கள் வேகமாகச் செல்வது மட்டுமல்லாமல், இத்திட்டம் விபத்துகளை கணிசமாகக் குறைக்கும். சென்னை - பெங்களூரு, சென்னை - மதுரை நெடுஞ்சாலைகளில் 30 சதவீதம் வாகன நெரிசலைக் குறைக்கும். திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் பொருளாதாரம் மேம்பட்டு வளர்ச்சி ஏற்படும்.

No comments:
Post a Comment